பூக்கள் படர்ந்த சாலையில், தத்தி தாவிச் செல்லும் ஓர் சமூகம்...., பிணங்கள் பரவிய பாதையில் தவழ்ந்து தடுமாறி தப்பிச் செல்லும் ஒடுக்கப்பட்டு ஒழிக்கப்படும் ஓர் சமூகத்தை அறியக் கிடைத்த தருணமே சென்ற வார நிலாமுற்றத்தில் மூன்றாம் ஆண்டு கணித மாணவி மைதிலியின் "ஆன்னே ஃப்ராங்கின் டைரி குறிப்புகள்" நூலைப் பற்றிய திறனாய்வு.... பதின் வயது சிறுமியின் தினசரி எழுத்தும் கூட வரலாற்றுப் பதிவாகும் நாட்குறிப்பின் தளத்திலே...... புத்தகத்தின் பக்கங்கள் ஊடே திறனாய்வின் விரல் பயணிக்கையில் யூதர்களின் தலைமறைவு முகாம் கதவுகள் திறக்கத் தொடங்கின.... நாஜிப் படைகளின் ஊடுருவலும் உபத்திரவங்களும், யூதர்களின் குளியலைக் கூட ஒரு வாரத்தின் தவப்பயனாய் மாற்றிய அவலங்களும் வாழ்க்கைப் போராட்டங்களும் ஒரு சிறுமியின் நாட்குறிப்பை நிரப்பி, சமூகப் பார்வைகளைப் பரப்பி இருக்கிறது.... தன்னை அறியாமல் தான் வாழும் சமூகத்தை அறிவது சாத்தியமில்லை... ஆன்னேயின் டைரிக் குறிப்புகளில் தன்னைச் சுற்றி தான் அறிந்த சமூகத்தின் பதிவில், ஆன்னே தன் சகோதரி, பெற்றோர், நட்பு என அனைத்தையும் தன்மயப்படுத்தி எழுதியதில், அமைதி காக்கும் பிற மனிதர்கள் போல் அல்லாமல் தலைமறைவாய் வாழ மறுக்கும் ஆன்னேயின் வேட்கை புரிகிறது.... சகோதரிக்கும் தனக்குமான உறவில் பெற்றோர் ஊடுறவலைக் கூட விரும்பாத தனிமையிலும்.... ஆண் தோழனுடனான உறவில், திருமண கட்டுக்களை யூகிக்க கூட அனுமதிக்காத கண்ணியத்திலும்.... பொது வெளிக்குள் முகம் நீட்ட காத்திருப்பதிலும்... ஆன்னே சுதந்திரத்தையும் சுயசார்பையும் தேடும் ஒரு முழுப்பரிமாணமுடைய பெண்ணாய் தோன்றுகிறாள்.... முழுப்பரிமாணம் அடைந்தது தனக்குள்ளான பார்வையில் மட்டுமல்ல, சமூகத்தின் சுழலுக்கள்ளும் தான்... ஆன்னேயின் பார்வைகளையும், பதிவுகளையும், பரிணாமங்களையும் பிரதிபலித்த மைதிலியின் திறனாய்வே தலைமறைவாய் ஆன்னேயின் கைகளில் அன்று தவழ்ந்த வன்முறையின் நிர்வாணத்தை இன்று அமைதியாய் அரங்கினுள் திரை விலக்கியது...

போர் எப்போதும் குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. உடல் ரீதியாகவும்,அதைவிட அதிகமாய் மனரீதியாகவும் குழந்தைகளை கொல்கிறது. சரியான புத்தகத்தை தேர்ந்தெடுத்து திறனாய்வு செய்த மைதிலிக்கும், வன்முறையின் நிர்வாணம் - என்ற சொல்லாடல் வழி சிறப்பான தொகுப்புரை எழுதிய நாகசியாமளா - அவர்களுக்கும் அன்பும், நன்றியும்.
ReplyDelete